×

ஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை ரத்து செய்ய கோரிக்கை பழநி நகரில் மனநல காப்பகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு

பழநி, ஜன. 20: பழநியில் மனநல காப்பகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் இடம் வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வருகை அதிகளவு இருப்பதால் பழநி நகரின் அடிவார பகுதியில் ஏராளமான மடங்கள், அன்னதான சத்திரங்கள் போன்றவை உள்ளன. இதனால் சிலர் தங்களது வீடுகளில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து பழநி நகரில் விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர்.

இவ்வாறு விட்டுச் சென்றபின், அந்நபர்கள் உணவுகளுக்காக அங்கும் மிங்கும் அலைவர். பக்தர்கள் வழங்கும் உணவுப் பொட்டலங்கள் மற்றும் அன்னதான சத்திரங்களில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடுவர். பின், சாலையோரங்களில் படுத்துறங்குவர். இவர்களில் ஆண், பெண் என இருபாலரும் அடக்கம்.கேட்பாரற்று திரியும் இவர்களில் பெண்களின் நிலை சொல்ல முடியாத அளவிற்கு வேதனையானதாக இருக்கும். மது அடிமைகள் சிலரால் மாற்றுத்திறனாளி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டு, கர்ப்பணியாவது பழநி நகரில் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

இதனைத்தடுக்க கேட்பராற்று சுற்றுத்திரியும் இதுபோன்றவர்களை பாதுகாக்க பழநி நகரில் மனநல காப்பகம் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பழநி நகரில் மனநல காப்பகம் அமைக்க தமிழக நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், காப்பகம் அமைக்க இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் காப்பகம் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 31 இடங்களில் அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இல்லத்திலும் தலா 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இல்லங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம் மற்றும் மறுவாழ்வு பணிகள் அளிக்கப்படுகின்றன. இந்த மையங்கள் போதுமானதாக இல்லாததால் தமிழக அரசு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் சுமார் 1100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.68 கோடியில் 22 பராமரிப்பு இல்லங்கள் துவங்குவதாக அறிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, தேனி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் துவங்குவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், இடம் வழங்க எந்தத்துறை அதிகாரிகளும் முன்வரவில்லை. மனநலம் பாதித்தவர்களை பராமரிக்கும் பொருட்டு கோயில் நிர்வாகம் பயன்பாடில்லாமல் இருக்கும் ஏதாவதொரு கட்டிடத்தை வழங்கினாலே போதும். சாலையோரங்களில் படுத்துறங்கி, சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களின் வாழ்க்கை பாதுகாப்பானதாக அமையும். அறநிலையத்துறை அதிகாரிகள் இவ்விஷயத்தில் உரிய அக்கறை காட்ட வேண்டும். இல்லாவிட்டால் மனநல காப்பக இல்லம் மாவட்டத்தில் உள்ள வேறு ஏதாவதொரு ஊரில்தான் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்