×

அரவக்குறிச்சி, தோகைமலை பகுதியில் 17,290 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

அரவக்குறிச்சி, ஜன. 20: அரவக்குறிச்சி வட்டாரத்தில் 106 போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு 8140 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இன்றும், நாளையும் வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளது. நேற்று நாடு முழுவதிலும் தேசிய தடுப்பூசி தினமாக அனுசரித்து அன்று தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் 106 போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கன்வாடி சத்துணவு மையங்கள், பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சில பொது இடங்களில் நடைபெற்றது. ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குழந்தைகளுக்கு மருந்து ஊற்றி துவக்கி வைத்தனர்.

இம்முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலன்செட்டியூர் சுங்கச் சாவடியில் கூடுதலாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அவ்வழியாக வாகனங்களில் சென்ற பயணிகளின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட பாரத சாரணர் இயக்கத்தினர் நெடுஞ்சாலையில் வாகனங்களில் வரும்
குழந்தைகளை கண்டறிந்து முகாமில் சொட்டு மருந்து ஊற்ற உதவி புரிந்தனர். முகாமை மாவட்ட நோய் தொற்றியல் மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம்களுக்கான ஏற்பாடுகளை மலைக்கோவிலூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆசாத்அலி, ஈசநத்தம் மருத்துவ அலுவலர் ராஜவர்ஷினி, குரும்பபட்டி டாக்டர் கவுசல்யா மேர்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் சேது குற்றாலம், கருப்புச்சாமி, குழந்தைவேல், அழகுராஜ் மற்றும் சமுதாய
சுகாதார செவிலியர்கள், பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர், நேற்றைய முகாமில் 8140 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் இன்றும், நாளையும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து போலியோ சொட்டு மருந்து ஊற்றப்பட உள்ளது.

தோகைமலை: தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் தலைமையில் முகாம் நடந்தது. மருத்துவ அலுவலர் சரண்யா, வட்டார சுகாதார ஆய்வாளர் ராமசாமி, தோகைமலை ஒன்றிய கவுன்சிலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குளித்தலை எம்எல்ஏ ராமர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தோகைமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் 34 மையத்திலும், காவல்காரன்பட்டி துணை சுகாதார நிலையத்தின் கீழ் அமைக்கப்பட்ட 24 மையம் மற்றும் சேப்ளாப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட 22 மையம் உள்பட மொத்தம் 80 மையங்களில் 9150 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மையங்களை தோகைமலை வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் ஆய்வு செய்தார். முகாமில் சேப்ளாப்பட்டி மருத்துவ அலுவலர் வள்ளி, காவல்காரன்பட்டி மருத்துவ அலுவலர் முகிலன், சுகாதார ஆய்வாளர்கள் பொன்னுசாமி, கேசவமூர்த்தி, மகேஸ்வரன், சவுந்தரராஜன் மற்றும் ரவிச்சந்திரன் உள்பட செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...