×

நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் குளித்தலை பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

குளித்தலை, ஜன. 20: குலை நோய் தாக்குதலால் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குளித்தலை பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்குட்பட்ட சூரியனூர், நச்சலூர், நங்கவரம், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, கட்டாணி மேடு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான வயல்களில் அதிக அளவில் நெற்பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் விளைந்த நெற்பயிர்கள் குலைநோய் தாக்கி 70 சதவீத நெற்பயிர்கள் பாதிப்படைந்து விட்டன. இதனால் நெற்கதிர்கள் விளைச்சல் மற்றும் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. குலைநோய் தீவிர தாக்குதலில் நெற்பயிர்கள் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றத்துடன் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் இதுவரை செலவு செய்த கவலையில் மிகவும் மன உளைச்சலில் உள்ளனர். மேலும் இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆடி மாதத்தில் நெற் பயிர்கள் நடவு செய்து தை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். அதுபோல் கடந்த ஆடி மாதம் நடவு செய்து விவசாய பணிகளை செய்து வந்தோம்.

தற்போது நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடை செய்யும் நேரத்தில் நெல் பயிர்களில் குலைநோய் தாக்கியதில பயிர்கள் காய்ந்து சருகு போல காட்சியளிக்கிறது. இதனால் 70 சதவீத நெல் பாதிப்பு அடைந்துள்ளது. இதற்காக பலமுறை செலவு செய்தும் பயனளிக்கவில்லை. குலைநோய் தாக்குதலில் பாதிப்பு அடைந்ததால் மாடுகளுக்கு வைக்கோல் தீவனத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நெல் சாகுபடி செய்த விவசாய குடும்பத்தினர் மிகவும் கவலையில் கஷ்டத்தில் இருந்து வருகிறோம். எனவே விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகையும் செலுத்தி உள்ளதால் பாதித்த பகுதிகளை வேளாண்துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்து அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : paddy field farmers ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு