திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

காரைக்கால், ஜன. 20:  காரைக்கால் திருநள்ளாற்றில் உள்ள உலக புகழ்மிக்க தர்பாராண்யேஸ்வரர் கோயிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பகவான் கோயிலில், வரும் 27ம் தேதி இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. சனிப்பெயர்ச்சி விழா தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் சனிபகவான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அந்த வகையில் பொங்கல் விடுமுறை என்பதால், காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் கோயிலில், வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  ஆயிரக்கணக்கானோர் நளன் குளத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதல் மாலை 6 மணி வரை 75 ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாக அதிகாரி சுபாஷ் தலைமையில் ஊழியர்கள், பக்தர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தனர்.

Related Stories: