குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

புதுச்சேரி, ஜன. 20: புதுவை மாநிலத்தில் 452 மையங்களில் 88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. நெல்லித்தோப்பு மணிமேகலை பள்ளியில் நடந்த முகாமை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி போலியோ சொட்டு மருந்து முகாம் புதுச்சேரி மாநிலத்தில் நேற்று (19ம் தேதி) நடந்தது. காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை 5 வயதுக்கு உட்பட்ட 88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக புதுச்சேரியில் 333, காரைக்காலில் 79, மாகேயில் 18, ஏனாமில் 22 மையங்கள் என மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இப்பணியில் 2 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மக்கள் அதிகம் கூடும் மற்றும் கடந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோயில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம், போகோ லேண்ட், போத்தீஸ் ஆகிய இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி - தமிழக எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியகோயில், திருக்கனூர், குருமாம்பேட் ஆகிய 6 இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. 45 மொபைல் வாகனங்கள் மூலமும் போலியோ மருந்து வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் இம்முகாமினை நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் நாராயணசாமி குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் எம்எல்ஏ, சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.காரைக்கால்: காரைக்கால்  அடுத்த திருநள்ளாரில் உள்ள தேனூர் அரசு மருத்துவமனையில் 5 வயதுக்கு  உட்பட்ட குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் துவக்கி வைத்தார். நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர்  மோகன்ராஜ், தொழில்நுட்ப உதவியாளர் சேகர், புள்ளியியல் அதிகாரி அன்பழகன்,  பொது சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி மற்றும் நலவழித்துறை ஊழியர்கள் கலந்து  கொண்டனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள்,  அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என 70 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டிருந்தன. இதில் நகர்ப்புறத்தில் 25  மையங்களிலும், கிராமப்புறத்தில் 45 மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. காலை  7 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து  கொடுக்கப்பட்டது.வெளிமாநிலங்களில் இருந்து தொழில்முறையில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும், கோயில்களுக்கு வரும் பக்தர்களின் குழந்தைகளுக்கும் போலியோ மருந்து கொடுக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பணியில் 300 பயிற்சி பெற்ற நலவழித்துறை  ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

Tags :
× RELATED பாகிஸ்தானில் போலியோ மருந்து முகாம்...