குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, ஜன. 20:  கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர். அந்த கிராம ஏரியில் தண்ணீர் உள்ளது. இதனால் இந்த கிராம பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணற்றில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் போதுமான அளவில் உள்ளது. இந்நிலையில் தண்டலை கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் மூலம் தெரு பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பைப்லைன் மூலம் தண்ணீர் மக்களுக்கு விநியோகம் செய்து வந்தனர். ஆனால் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பல இடங்களில் பைப்லைனில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் குடிநீர் மின்மோட்டார் பழுதாகியதால் கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை சுமார் 8 மணியளவில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் கிராம பஸ்நிறுத்தம் பகுதியில் போலீஸ் இரும்பு தடுப்புகட்டையை இருபுறமும் அமைத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Related Stories: