×

தரை வழி மின்வடம் அமைக்கும் பணி கன்னியாகுமரியில் மின்தடையால் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

கன்னியாகுமரி, ஜன.20:  கன்னியாகுமரியில் தரை வழி மின்வடம் அமைக்கும் பணிக்காக அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் திரிவேணி சங்கமம், கடற்கரை சாலை உட்பட அனைத்து பகுதிகளிலும் மனித தலைகளாகவே காட்சி அளிக்கின்றன. இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் மேல்பகுதி வழியாக சென்று கொண்டிருக்கும் மின்கம்பிகளை மாற்றி தரைவழி மின் வடம் அமைக்கும் பணியை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுபோல இரவு நேரத்திலும் மின்தடை ஏற்படுவதால் பகவதி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ேமலும் இருள் சூழ்வதை பயன்படுத்தி தொடர் திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தரைவழி மின் வடம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தும் மின்வாரியம் செவிசாய்க்கவில்லை. இதுபோல தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இரவு நேரத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் மின்தடை மற்றும் பணிகளின் விபரம் குறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் அலட்சியமாக பதில் கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : ground power plant ,Kanyakumari ,
× RELATED தொடர் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு