ரஜினி, கமல் வந்தாலும் வரவேற்போம்: திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் வசந்தகுமார் எம்.பி. பேட்டி

நாகர்கோவில், ஜன.20 :  திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி, கமல் யார் வந்தாலும் வரவேற்போம். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தான் என்று வசந்தகுமார் எம்.பி. கூறினார். வசந்தகுமார் எம்.பி. நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகள் முடங்கியுள்ளன. மத்திய அரசு தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 54 ஆயிரம் கோடி முடங்கி கிடக்கிறது. பல வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமல் பாதியில் நிற்கின்றன. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் குமரி மேற்கு மாவட்டத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினையை சுமூகமாக முடிக்க, மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் எந்த பிரச்சினையும் இருக்காது.

நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய நடிகர். நாடு முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால் அவருக்கு பயமும் இருக்கிறது. இருவேறு நிலையில் அவர் தவித்து வருவது தெரிகிறது.  ரஜினிகாந்த்  திமுக கூட்டணியில் இணைய வேண்டும். இது தொடர்பாக நானே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் பேசுவேன். யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். கமலஹாசன் வந்தாலும் கூட ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அமைய வேண்டும். எங்கள் கூட்டணியில் யார் வந்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிற மத்திய அரசு தற்போது நிதி அமைச்சரை மாற்றப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.  இவர்கள் என்ன செய்தாலும் அது மக்களுக்கு பலனளிக்காது. மோடியும், அமித்ஷாவும் முதலில் பொருளாதார வல்லுனர்கள் உடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தேவைப்பட்டால் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை கேட்டு நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற பிரதமர் முன் வர வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் 4 கோடியே 50 லட்சம் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு, மாநில அரசுகள் இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ரிசர்வ் வங்கியின் அனைத்து லாபத்தையும் மத்திய அரசு கேட்பது நாட்டுக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

வசந்த் அன் கோ சார்பில் வேலை வாய்ப்பு முகாம் வசந்தகுமார் எம்.பி. மேலும் கூறியதாவது :

வசந்த் அன்கோ சார்பில் பிப்ரவரி 2ம் தேதி தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரியில் வைத்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க இருக்கிறது. இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இன்ஜினியரிங் முடித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். நாங்கள் நடத்திய வேலை வாய்ப்பு முகாம் மூலம் இதுவரை 1800 பேர் பயன்பெற்றுள்ளனர். குமரி மாவட்ட இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இது போன்ற வேலை வாய்ப்பு முகாமை நாங்கள் நடத்தி வருகிறோம். எனது மாத சம்பளம் ரூ. ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி நலனுக்காக செலவழித்து வருகிறேன். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் நலனுக்காக குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியிலும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டு இருக்கிறது. குளங்களை தூர்வார கூடுதலாக ஒரு ஜேசிபி வாங்க முடிவு செய்து உள்ளேன். அரசு பள்ளிகளில் பெஞ்ச், டெஸ்க் போன்றவை இல்லாமல் இருந்தால் நானே எனது சொந்த நிதியில் இருந்து வாங்கி கொடுப்பேன். அரசு மூலம் இதை கொடுக்கலாம் என்றால், அவர்கள் 4, 5 மடங்கு வைத்து விலை போடுகிறார்கள். குமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறேன். சாமித்தோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும். இதற்காக ஆய்வுக்காக விரைவில் மத்திய குழு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

காண்ட்ராக்டர்களுக்கு
வேலை செய்யும் அதிகாரிகள்

வசந்தகுமார் எம்.பி. கூறுகையில், குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன் ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகும் இன்னும் சாலை சீரமைக்கபடாமல் உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்ட பின்னரும் கேட்க வில்லை. காண்ட்ராக்டர்கள் கீழ் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் கீழ் அவர்கள் பணியாற்றவில்லை. திட்ட பணிகளை மேற்பார்வையிட வேண்டிய கலெக்டர் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறார். பலமுறை அவரிடம் இது தொடர்பாக தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தேவைப்படும் பட்சத்தில் அடுத்த கட்டமாக மாவட்ட கலெக்டர் குறித்து மத்திய அரசிடம் புகார் புகார் அளிப்பேன் என்றார்.

Tags : Rajini ,Kamal ,alliance Interview ,DMK ,
× RELATED ரஜினியுடன் கூட்டணி விவகாரம் ராமதாஸ் திடீர் அந்தர் பல்டி