×

தாராபுரத்தில் எருதுகட்டு விழா

தாராபுரம், ஜன. 19:   தாராபுரம் அருகே எருதுகட்டு விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன. தாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமம் உள்ளது. இங்கு பொங்கல் விழாவையொட்டி கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக எருதுகட்டு விழா நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது என்றால், தாராபுரம் அருகே நடைபெறும் எருதுகட்டு விழா தமிழக அளவில் மிகவும் பிரபலமானது. இதில் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தின் நடுவில் பனை மரத்தை நட்டு வைத்து, 60 அடி நீள கயிற்றில் காளைகள் கட்டி வைக்கப்படும். இதில் ஆவேசத்துடன் இருக்கும் காளைகள் கயிற்றுடன் ஆவேசமாக விளையாட்டு மைதானத்தை சுற்றி வரும். அதனை பிடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் காளையின் திமிலை பிடித்து அடக்க வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் அடங்காத காளைகள் வீரர்களை கொத்துக் கொத்தாக அள்ளி வீசியது. இதில் காளைகள் வீரர்களை மிரள வைத்து சீறிப் பாய்ந்தது, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதில் காளைகளின் திமிலை பிடித்த வீரர்களுக்கு ரூ.500 ரொக்கப் பரிசு, வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் சீறிப்பாய்ந்து தப்பிய காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் உரிமையாளரிடம் வழங்கப்பட்டன. இந்த எருதுகட்டு நிகழ்ச்சிக்காக மதுரை, திண்டுக்கல், வாடிப்பட்டி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான காளை மாடுகள், வீரர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தாராபுரம், தளவாய்பட்டிணம், உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Eruvattu Festival ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...