×

நொய்யல் ஆற்றின் கரையிலுள்ள தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கோரிக்கை

திருப்பூர், ஜன. 19: திருப்பூர் ராயபுரம் நொய்யல் ஆற்றின் கரையிலுள்ள 7 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர்கள் காலத்தில் திருப்பூர் மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், தீயணைப்பு நிலையங்கள், காவல் நிலையங்கள், தாலுகா அலுவலகம், சிறைச்சாலை, பள்ளி கட்டடங்கள் கட்ட ஒரு சமூதாய மக்கள் பல்வேறு கிராமங்களிலிருந்து திருப்பூர் வந்தனர். இதனால் குறித்த நேரத்திற்கு வேலைகள் துவங்கவும், வேலைகளை முடிக்க முடியவில்லை. இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்ய வசதியாக ராயபுரம் நொய்யல் ஆற்றின் கரையில் காலியாக உள்ள இடத்தை வழங்கினர். இந்த இடத்தில் குடிசைகள் அமைத்து பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். சுதந்திரம் பெற்ற பின் கட்டுமானப்பணியாளர்கள் குடும்பத்துடன் மாநகரின் பல்வேறு இடங்களில் இடம் வாங்கி குடியேறினர்.

இதனால் அந்த இடம் புதர்மண்டி காட்சியளித்தது. கடந்த 70 ஆண்டுகளாக அந்த இடத்தை அப்பகுதி பொது மக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த இடத்திற்கு பொய்யான ஆவணங்கள் தயார் செய்து பத்திரம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த இடத்திற்கு உரிமை கோரி பல பேர் முன்வந்ததால் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கடந்த மூன்று  ஆண்டுகளாக பஞ்சாயத்து பேசி வருகின்றனர். இந்நிலையில், ஒருசிலர் புதர்களை அகற்றி பென்சிங் அமைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதயைறிந்த மற்றொரு கும்பல் பென்சிங் போட்டவரை விரட்டி விட்டு தற்போது அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தென் மாவட்டங்களைச்சேர்ந்த தொழிலாளர்களாக இருப்பதால் அடிக்கடி  குடும்ப உறுப்பினர்களை பார்க்க தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்வதால் உற்பத்தி பாதிப்பதாக தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், பனியன் தொழிலாளர்களுக்கு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி குறைந்த வாடகைக்கு கொடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : apartments ,banks ,Noel River ,
× RELATED உரிய ஆவணமில்லாத ரூ.68 ஆயிரம் பறிமுதல்