×

மாவட்டத்தில் 3 நாட்களில் ₹10.20 கோடிக்கு மது விற்பனை

நாமக்கல், ஜன.19: பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் மூன்று நாட்களில்  ₹10.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடடைகள் உள்ளன. இக்கடைகளில் நாளொன்றுக்கு சுமார் ₹ 40 கோடி வரையிலும் மதுபானங்கள் விற்பனை நடக்கும். தவிர ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, தீபாவளி உள்பட பண்டிகையின் போது வழக்கத்தை விட பல மடங்கு விற்பனை அதிகமாக இருக்கும். இந்த வகையில் பொங்கல் பண்டிகையொட்டி தமிழகம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை களைக்கட்டியது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் 180 டாஸ்மாக் கடைகள் செயல் படுகிறது. இந்த கடைகளில் சாதாரண நாட்களில் சுமார் ₹1.5 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். விஷேச நாட்களில் மது விற்பனை ₹3 கோடிக்கு மேல் தாண்டும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மது விற்பனை அமோகமாக இருந்தது. கடந்த 14ம் தேதி போகி பண்டிகை அன்று ₹3.05 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

தொடர்ந்து 15ம் தேதி ₹3.40 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. 16ம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி நண்பகல் 12 மணியில் இருந்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது. வழக்கமாக நடக்கும் வியாபாரத்தில் இருந்து பொங்கல் பண்டிகையில் அதிகளவு விற்பனை இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் விஷேச நாட்களில், சாதாரண நாட்களின் விற்பனையை விட 20 சதவீதம் வரை மதுபானம் விற்பனை அதிகரிக்கும். நடப்பாண்டு பொங்கல் பண்டிகையொட்டி போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் 10.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது. இவ்வாறு  அவர்கள் தெரிவித்தனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...