×

முயல்பிடித்த 2 பேருக்கு ₹20ஆயிரம் அபராதம்

அரூர், ஜன.19: மொரப்பூர் அருகே வனப்பகுதியில் முயல், கவுதாரியை பிடித்த 2பேருக்கு ₹20ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க, வனத்துறை சார்பில் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மொரப்பூர்- கல்லாவி சாலையில்  மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில், சாக்கு மூட்டையுடன் வந்த 2பேரை நிறுத்தி வனத்துறையினர் விசாரித்தனர். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ளிமலையை சேர்ந்த காவேரி(44), செந்தில்(35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த, சாக்கு மூட்டையில் 2 முயல்கள், 7 கவுதாரி மற்றும் கம்பி வலைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2பேரையும் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன் ஆஜர்படுத்தினர். முயல், கவுதாரியை பிடித்த குற்றத்திற்காக, ஒருவருக்கு ₹10ஆயிரம் வீதம் ₹20ஆயிரம் அபராதம் விதித்தார். பின்னர் முயல், கவுதாரியை வனப்பகுதியில் விட்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா