×

திருச்சி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அறுவடைக்கு ஆபத்து வருமோ என அச்சம் தை பிறந்தால் வழி பிறக்கும் என காத்திருந்தவர்கள் வயிற்றில் புளி

திருச்சி, ஜன.19: திருச்சி மாவட்டத்தில் நெல் வயல்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் நேற்று பெய்த திடீர் மழையால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி, வாளாடி, எட்டரை, கோப்பு, அல்லித்துறை, திருவெறும்பூர், லால்குடி, துறையூர், மணப்பாறை என சுமார் 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் நேற்று காலை முதல் திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல் பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளபோது மழை பெய்தால், நெல் பயிர் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. தவிர, நெல் சாய்ந்து விடும். பள்ளத்தில் நீர் தேங்கும். இதனால் அறுவடைக்கு ஆபத்தாக இருக்கும். சரியாக நீர் வடியாவிட்டால் நெல் முளைவிட்டு வீணாகும். நெல் பயிர் நல்ல காய்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே அறுவடை சிறப்பாக நடக்கும்.

தற்போது பெரும்பாலும் இயந்திரங்கள் கொண்டே நெல் அறுவடை செய்யப்படுகிறது. மழை பெய்து நெல் மணிகள் நனைந்து, பயிர் வயலுக்குள் அமிழ்ந்துவிட்டால் ஆள் வைத்துதான் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியும். தை மாதம் பிறந்து சில நாட்களில் விவசாயிகள் தங்கள் வயல்வெளிகளில் அறுவடையை துவங்குவர். அறுவடையையொட்டியே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே அறுவடையை தான் குறிக்கிறது. அப்படியிருக்கையில் திடீரென நேற்று பெய்த மழை விவசாயிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. மேலும் மழை தொடரக்கூடாது என பலரும் வேண்டிக்கொண்டுள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ‘தொடர் மழை பெய்தால் அறுவடை கடுமையாக பாதிக்கும். இருந்தாலும் நெல் பயிர் நன்கு காய்ந்து இருந்தால்தான் அறுவடையும், அதற்குரிய பலனும் விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த மழையால் நெல் மணிகளின் ஈரத்தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுவே ஒரு வகையில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். தொடர்ந்து மழை பெய்தால் சிக்கல்தான்’ என்றார்.

Tags : district ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...