×

வலங்கைமான் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழையால் மடிந்தது

வலங்கைமான், ஜன.19: வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் தற்போது பெய்துவரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் நெல் அறுவடைபணிகள் பாதிப்டைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக உரிய நீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் பாசணத்திற்கு மேட்டூர் அணை கால தாமதமாக திறக்கப்பட்டது. பாசணத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டும் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் வாய்க்கால்களில் போதிய தண்ணீர் வரவில்லை. இதையடுத்து டெல்டா விவசாயிகள் வடகிழக்கு பருவமழையின் உதவியோடு ஒருபோக சம்பா சாகுபடியை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததை அடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. நடப்பு பருவத்தில் வலங்கைமான் தாலுகாவில் சம்பா பத்தாயிரத்து 535 ஹெக்டேரிலும், தாளடி நான்காயிரத்து 48 ஹெக்டேரிலும் இயந்திர நடவு, கை நடவு மற்றும் நேரடி விதைப்பு ஆகியவை மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்காயிரத்து 43 ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

டெல்டா பகுதிகளில் கடந்த ஆண்டைவிட ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்துள்ளது. அதன் காரணமாக பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போதே சில இடங்களில் நன்கு வளர்ந்து இருந்த சம்பா பயிர்கள் கதிர் முற்றும் முன்னரே சாயத் தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் சம்பா அறுவடை பொங்கல் பண்டிகைக்கு பிறகு துவங்கி ஜனவரி மாத இறுதிக்குள் சுமார் நாற்பது சதவீதம் அறுவடை முடிந்துவிடும். மேலும் பிப்ரவரி மாதம் 15 தினங்களுக்குள் 70 சதவீதமும் இம்மாத இறுதிக்குள் சம்பா மற்றும் தாளடி அறுவடைபணிகள் முடிவுறுவது வழக்கம்.

இந்நிலையில் வலங்கைமான் பகுதி விவசாயிகள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அறுவடை பணிகள் துவங்க இருந்த நிலையில் தற்போது மழை பெய்வதன் காரணமாக அறுவடை பணிகள் தள்ளிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது பெய்யும் மழையின் காரணமாக நன்கு வளர்ந்த நிலையில் உள்ள நெற்பயிர்கள் சாயத் தொடங்கியுள்ளது. சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு நெல் அறுவடை செய்ய ஒரு மணிநேரம் ஆகும் நிலையில் தற்பொது நெல் அறுவடைக்கான நேரம் இரண்டு மடங்காகும் நிலை உள்ளது. அதனால் விவசாயிகளுக்கு நெல் அறுவடைக்கு கூடுதல் பணம் செலவாகின்றது.

மேலும் நெல்லின் ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்பனை செய்வதிலும், நெல்லை இருப்பு வைத்து கொள்வதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தக்கூடிய வைக்கோல் தற்பொது பெய்யக்கூடிய மழையால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பா அறுவடைக்கு முன் தெளிக்கப்பட்ட பயறு மற்றும் உளுந்து போன்றவை தற்போது பெய்து வரும் மழையால் பாதிப்படையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முன்னதாக நடப்பு பருவத்தில் வடகிழக்கு பருவமழை சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கதிர்வரும் நேரத்தில் பெய்ததால் கதிர்கள் பதராகி விட்டது. அதனால் குறிப்பாக பிபிடி போன்ற நெல் ரகங்கள் போதிய விளைச்சல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Valangaiman ,paddy fields ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு