தஞ்சை மாவட்டத்தில் ரூ.11.79 கோடியில் 13 தொழில் நிறுவனங்கள் அமைப்பு

தஞ்சை, ஜன. 19: தஞ்சை மாவட்டத்தில் ரூ.11.79 கோடி முதலீட்டில் 13 தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு தொழில் வணிகத்துறை புதிதாக தொழில் நிறுவனங்கள் அமைக்கவும், இதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கவும் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தஞ்சை மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள தொழில் நிறுவனங்களை தேர்வு செய்ய மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் கடந்த 9ம் தேதி நடந்தது.

இதில் 13 திட்டங்களுக்கு ரூ.11.79 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.1.54 கோடி மானியத்துடன் கூடிய தொழிற் கடனுதவிக்கான அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட திட்டங்கள் அலுமினிய கண்டைனர்கள் தயாரிப்பு, கான்கிரீட் கலவை தயாரிப்பு, பேக்கரி, காகித பைகள் தயாரிப்பு, புதிய மருத்துவமனை, கிரேன் சர்வீஸ், பர்னிச்சர் தயாரிப்பு போன்றவைகளாகும். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ, தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21க்கு மேலும் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பயனாளிகள் அவர்களது குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவர்களாக இருக்க வேண்டும். தொழிற்கடனாக வங்கிகள் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வழங்கப்படும். நேரடி விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு இத்திட்டத்தின்கீழ் பெற இயலாது.

தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகள் புதிய தொழிலகங்கள் அமைத்திடுவதற்கான திட்டங்கள் ஏதேனும் வங்கிகளில் பரிசீலனையில் இருந்தால் தகுதியின் அடிப்படையில் அத்தகைய தொழிலகங்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். தேர்வு செய்யப்பட்ட அனைத்து தொழிலகங்களுக்கும் அரசால் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் எவ்வித சிரமங்களும் இன்றி வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்,நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சை என்ற முகவரியில் அணுகி அறிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: