ஏர் கலப்பைக்கு மரியாதை செலுத்தி அடுப்பில்லா பொங்கல் விழா கொண்டாட்டம்

அரியலூர்,ஜன.19: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏர் கலப்பைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அடுப்பில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டு, ஏர் கலப்பைக்கு நேற்று படையலிடப்பட்டது.
திருமானூர் அருகேயுள்ள வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டின் நோக்கம் குறித்து வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முக சுந்தரம் கூறுகையில், இயந்திரமாக்கலால் விவசாயம் பல வகைகளில் நெருக்கடிக்கு ஆளாகி மனிதன் உண்ணும் உணவு முழுக்க ரசாயனமாகவே உள்ளது. ரசாயனமற்ற வேளாண்மையை முன்னெடுக்க இயற்கை பொருட்களை கொண்டு விளைந்த பொருட்களை கொண்டு சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது என்றார்.

இன்று வழக்கொழிந்து போன ஏர்க் கலப்பையை நினைவூட்டும் விதமாக ஏர்க்கலப்பைக்கு மாலையிட்டு மஞ்சள் குங்குமம் வைத்து தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும் அடுப்பில்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பூங்கார் நெல்லில் இருந்து ஊறவைத்து தயாரிக்கப்பட்ட அவல் சர்க்கரைப் பொங்கலை நவக்கிரகங்களையும் வணங்கும் விதமாக 9 புதுப்பானையில் பொங்கல் இட்டு சமத்துவ பொங்கல் விழாவில் ஏர்க்கலப்பைக்கு மரியாதை செலுத்தும் விதமாக சந்தனம், மஞ்சள், குங்குமம், ஆவாரம்பூ, பூளாப்பூ உள்ளிட்ட பூக்கள், வேப்பிலை, மாவிலை, புங்கன் இலை, வாழைக் குருத்து, தென்னங்குருத்து ஓலை இவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து படையலிட்டனர்.
தொடர்ந்து, அடுப்பில்லாமல், இயற்கை முறையில் விளைந்த பூங்கார் நெல் அவல் கொண்டு, சர்க்கரை கலந்து பொங்கல் வைத்து ஏர் கலப்பைக்கு படையலிடப்பட்டது. பின்னர், அனைவருக்கும் அவல் பொங்கல், பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பழரசம் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், இயற்கை விவசாயிகள் ஆசிரியர் சச்சிதானந்தம், இயற்கை ஆர்வலர் கலையரசி சரவணன், இயற்கை மருத்துவர் பழனிசாமி, ஊராட்சி தலைவர் யோகவள்ளி ராஜேந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் அம்பிகா ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Strawberry Pongal Festival ,
× RELATED அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திமுக பொறுப்பாளர் மரியாதை