ஏறி, இறங்குவதில் சிரமம் என பொதுமக்கள் புகார் பொதுப்பிரிவு பயணிகள் அதிகளவில் பயணிக்கும்

வேலூர், ஜன.19:பொதுப்பிரிவு பயணிகள் அதிகளவில் பயணிக்கும் தினசரி ரயில்களில் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் ஏறி, இறங்க முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வே துறையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 500 கோடி மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். அதேபோல் சரக்கு ரயில்கள் மூலம் 35 கோடி டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. நாட்டில் நீண்டதூர பயணத்திற்கு ரயில்களே பெரும்பாலான மக்களுக்கு பயன்படுகிறது. ரயில்வே துறையில் சுமார் 16 லட்சம் பணியாளர்கள் பல்வேறு நிலைகளில் வேலை செய்து வருகின்றனர்.

பயணிகள் ரயில் பெட்டிகள் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில்(ஐசிஎப்) தயாரிக்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளுடன் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி இலங்கை, ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு பொதுப்பிரிவு, முன்பதிவு பெட்டி, ஏசி முதல் வகுப்பு பெட்டி, படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், மின்சார ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ரயில் போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து சேவையில் நவீன தொழில்நுட்ப உத்திகளும் புகுத்தப்படுகின்றன. தானியங்கி டிராக் சேஞ்ச் சிஸ்டம், சிக்னல் கன்ட்ரோல், கணினி மயமாக்கபபட்ட ரயில் போக்குவரத்து கண்காணிப்பு மையம் ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், ரயில் பெட்டிகள் உற்பத்தியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் தற்போதைய சூழலுக்கு ஏற்ப அழகிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களுடன் ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்தது.

இதற்கென பல்வேறு நாடுகளில் இயக்கப்படும் ரயில் பெட்டிகள் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து இந்திய ரயில்வேயின் உயர்மட்டக்குழு ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஜெர்மன் தொழில்நுட்பத்தில் எல்எச்பி ரயில் பெட்டிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு 2013ம் ஆண்டு முதல் எல்எச்பி ரயில் பெட்டிகள் உற்பத்தி தொடங்கியது. அதைத்தொடர்ந்து, 2016ம் ஆண்டு முதல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் எல்எச்பி வகை ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.எல்எச்பி பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, மேலும் அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜிங் வசதி உட்பட பல்வேறு வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வசதிகளுடன் முதல்கட்டமாக இணைக்கப்பட்டு ஓடும் ரயில்களில் 80 படுக்கைகளுடன் சாதாரண பெட்டிகளும், 72 படுக்கைகளுடன் ஏசி பெட்டிகளும் உள்ளன.

விமானத்தின் உட்புற தோற்றத்துடன் நவீன சாய்வுதள சொகுசு இருக்கைகள், உணவு மேஜை, கால்களை வசதியாக வைத்துகொள்ள இடவசதி, மொபைல் சார்ஜ் பிளக் பாயின்ட், கழிவறைகள் உள்ளன. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலமாக குடிநீர் வழங்கும் சேவை இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மிகச்சாதாரணமாக 160 கிமீ வேகத்தில் இயங்கும் வகையில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு தற்போது தெற்கு ரயில்வே உட்பட 16 மண்டலங்களில் இந்த வகையான ரயில் பெட்டிகள் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளன.அதன்படி, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரயில்களில் எல்எச்பி வகை பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு பயணிகளுக்காக தொடக்க காலத்தில் இணைக்கப்பட்ட எல்எச்பி வகை ரயில் பெட்டிகள் தற்போது பொதுப்பிரிவு பயணிகள் செல்லும் பெட்டிகளாகவும் இணைத்து இயக்கப்படுவதால் பல்வேறு சிக்கல்களுடன் பயணிக்க வேண்டியிருப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘சென்னை சென்ட்ரலை மையமாக கொண்டு இயக்கப்படும், கோவை இன்டர்சிட்டி, சென்னை-பெங்களூரு லால்பாக், பெங்களூரு-சென்னை, சென்னை-மைசூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன. இதில், ஜோலார்பேட்டை, காட்பாடி, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பயணிக்கின்றனர்.தற்போது பொதுப்பிரிவு பெட்டிகளும் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பொதுப்பிரிவு பெட்டிகளில் பயணிகள் ஏறி, இறங்க வசதியாக 6 வழிகள் இருந்தன. தற்போது அவை 4 வழிகளாக எல்எச்பி பெட்டிகளாக மாறியுள்ளது. குறிப்பாக சாதாரண டிக்கெட் எடுத்து பயணிக்கும் மக்கள் செல்லும் பொதுப்பிரிவு பெட்டிகளிலும் 4 வழிகளே உள்ளன. இடையில் இருந்த கதவு அடைக்கப்பட்டு அந்த இடத்தில் கூடுதலாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் ரயிலில் ஏறி, இறங்க முட்டிமோத வேண்டியுள்ளது. அப்போது ஏற்படும் கூச்சல் குழப்பம், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களை சாதகமாக்கி கொள்ளும் திருட்டு ஆசாமிகள் நகை, செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் இப்போது அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முட்டிமோதி ரயிலில் ஏறும் பயணிகள் நிற்க இடமின்றி பரிதவிக்கின்றனர். நின்று பயணிக்கவும் இடையூறாக கேன்டீன் ஊழியர்களும், டிடிஆர்களும் அடிக்கடி குறுக்கும் நெடுக்குமாக வந்து செல்கின்றனர்.இதுஒருபுறம் இருக்க ரயில்களில் காற்றோட்டமும் குறைவாக உள்ளது. ரயில் பெட்டியில் உள்ள மின்விசிறிகள் பெயரளவில் மட்டுமே சுழல்கின்றன. இதனால் நவீன எல்எச்பி வகை பெட்டிகளில் பயணிப்பவர்கள் வியர்வையில் நனைந்தபடியே பயணிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை உள்ள தூரத்தை கால்கள் வலிக்க நின்றபடி பயணிக்கும் பெண்கள், குழந்தைகள், உடல்நிலை பாதித்த முதியவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் நவீன கட்டமைப்பு என்கிற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பயோகழிவறைகள் முறையான பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளன.

சமீபத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் வாலாஜா வந்தனர். வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் ரயிலில் இருந்து கீழே இறங்கினர். அப்போது பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் ரயில் புறப்படுவதற்குள் ஏறிவிட வேண்டும் என்று நினைத்து கூட்டத்துக்குள் புகுந்து ரயிலில் ஏறினர். அப்போது வயதான பெண்கள், குழந்தைகள் ஆகியோர் ரயிலில் இருந்து இறங்க முடியாமல் பரிதவித்தனர்.

அதற்குள் ரயிலும் புறப்பட்டு சென்றது. இதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அலறினர். அப்போது ரயிலில் வந்த பயணி ஒருவர் அரக்கோணம் அல்லது சோளிங்கர் ரயில் நிலையத்தில் இறக்கிவிடுவதாக கூறியதையடுத்து நிம்மதியடைந்தனர். குறித்த நேரத்தில் இறங்க முடியாததால் இதுபோன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.எனவே, பொதுப்பிரிவு ரயில் பெட்டிகளில் செல்லும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 6 வழிகள் கொண்ட எல்எச்பி வகை ரயில் பெட்டிகளை இணைத்து ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளுக்கு சிறப்பான ரயில் சேவையை அளிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்படும் ரயில்வேத்துறை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான சேவை அளிக்கும் வகையில் ரயில் பெட்டிகளை இணைத்து பாதுகாப்பான ரயில் பயணத்தை அளிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இடமில்லை

இதற்கு முன்பு ரயில்களில் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இந்த வகை பெட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது. குறைந்த உயரம் கொண்ட இருக்கைகள், கழிவறை ஆகியவை கட்டமைக்கப்பட்டது. தற்போது ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள எல்எச்பி பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் ரயில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் மொத்தம் 7,566 ரயில் இன்ஜின்களும் 37,840 பயணிகள் பெட்டிகளும் 2,22,147 சரக்கு பெட்டிகளும் உள்ளன. மொத்தம் 6,853 ரயில் நிலையங்களும் 300 யார்டுகளும் 2,300 ஷெட்களும், 700 பழுதுபார்ப்பு மையங்களும் உள்ளன.

Related Stories: