வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை காட்பாடி அருகே பட்டப்பகலில் பயங்கரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி

வேலூர், ஜன.19:காட்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியை அடித்துக்கொன்று 5 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணய்யா. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி சரோஜா(70). கணவர் இறந்து விட்டதால் சரோஜா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது உறவினரான ரவிச்சந்திரன் என்பவர் சரோஜாவை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்றுமுன்தினம் காலை கீழ்முட்டுக்கூரில் நடைபெற்ற மாடுவிடும் திருவிழாவை காண்பதற்காக குடும்பத்துடன் அங்குள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை 5.30 மணியளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீடு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், சுற்றுச்சுவர் ஏறி குதித்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சரோஜா தலையின் பின்பக்கத்தில் இரும்பு ராடால் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் இறந்துகிடப்பது தெரியவந்தது.

மேலும் அவர் காதில் அணிந்திருந்த முக்கால் சவரன் கம்மல், தங்கச்சங்கிலி என்று 5 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால் கதறி அழுத ரவிச்சந்திரன் குடும்பத்தினர் உடனடியாக லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலையை மர்ம நபர்கள் யாரேனும் நகைக்காக செய்தனரா? அல்லது மூதாட்டிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் வீடு ஆகியவற்றை அபகரிக்க உறவினர்கள் யாராவது கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர். மூதாட்டிக்கு சொந்தமான 5 ஏக்கர நிலம், வீடு ஆகியவற்றை அபகரிப்பதற்காக கொலை செய்து விட்டு நாடகமாடுகின்றனரா? என்ற இரு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு டிஐஜி காமினி, எஸ்பி பிரவேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மோப்பநாய், சிறிதுதூரம் சென்று நின்றுவிட்டது.

Related Stories: