×

ஆரோக்கிய இந்தியா சைக்கிள் தின விழிப்புணர்வு ஊர்வலம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடந்தது திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஜன.19: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நேற்று ஆரோக்கிய இந்தியா சைக்கிள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் ஜனவரி 18ம் தேதி ‘ஆரோக்கிய இந்தியா- சைக்கிள் தினம்’ கொண்டாட வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக தன்னார்வ அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும், ‘ஆரோக்கிய இந்தியா - சைக்கிள் தினம்’ விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டிருந்தார். அதையொட்டி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மாணவர்கள், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று, கிராம வீதிகளில் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.குறைந்த தூர பயணத்துக்கு சைக்கிளை பயன்படுத்துவோம், தினமும் சிறிது நேரம் சைக்கிள் பயணத்தை பயிற்சியாக்குவோம் என முழக்கமிட்டபடியும், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடியும் சென்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தினம் என்பதால், பெரும்பாலான கிராமங்களில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. ஆனாலும், இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

பெரணமல்லூர்:
பெரணமல்லூர் ஒன்றியம், கொழப்பலூர் ஊராட்சியில் நேற்று நடந்த ஆரோக்கிய இந்தியா சைக்கிள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ஜோதி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், ஊராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். இதில் ஊராட்சி தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அடுத்த சேர்ப்பாப்பட்டு ஊராட்சியில் நேற்று நடந்த ஆரோக்கிய இந்தியா சைக்கிள் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை ஊராட்சி தலைவர் தீபா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வீதிவீதியாக சென்று சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

செய்யாறு:
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா கீழ்நாய்க்கன்பாளையம் கிராமத்தில் நேற்று சைக்கிள் தின விழிப்புணர்வு ஊர்வலம் ஊராட்சி தலைவர் மு.கோபிகண்ணன் தலைமையில் நடந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. இதில், ஊராட்சி துணைத் தலைவர் முனுசாமி, ஊராட்சி செயலர் கிருகபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Health India Cycle Day Awareness Procession ,Thiruvannamalai district ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...