பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாணவன்: வைரல் வீடியோவால் பரபரப்பு

பூந்தமல்லி, ஜன.19: பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை மதுரவாயல் எம்.எம்.டி ஏ.காலனி பகுதியில் சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர், தனது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 11ம்  தேதி  இரவு நடுரோட்டில் கேக் வெட்டி நண்பர்களுடன் சேர்ந்து  கொண்டாடி உள்ளார். அப்போது அவரது நண்பர்கள் ரூபாய் நோட்டுகளால் ஆன பண மாலை அணிவித்து, தலையில் பணக் கிரீடம் வைத்துள்ளனர். பின்னர், அவருக்கு 4 அடி நீள பட்டா கத்தியை  பரிசாக கொடுத்தனர்.  வழக்கறிஞர் முத்திரை பொறிக்கப்பட்ட அந்த கேக்கை பட்டா கத்தியால்  வெட்டியுள்ளார்.

இதை அவரது நண்பர்கள்  செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பட்டா கத்தியால் கேக்கை வெட்டியது அதே பகுதியை சேர்ந்த காமேஷ் என்பதும், இவர் திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருவதும் தெரிந்தது. மேலும், அவரிடம் தொடர்ந்து  விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 100க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் பிரபல ரவுடி பினு தனது பிறந்த நாளை மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தில் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடினார். அது முதல் பட்டாகத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : student ,
× RELATED பட்டா கத்தியால் கேக் வெட்டிய 4 பேர் கைது