கடம்பத்தூர் அருகே சுடுகாட்டுக்கு வயல் வழியாக சடலம் எடுத்து செல்லும் அவலம்: ஆக்கிரமிப்பு பாதையை மீட்க கோரிக்கை

திருவள்ளூர், ஜன. 19: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது செஞ்சி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது பானம்பாக்கம் கிராமம். இக்கிராமம் சென்ட்ரல் - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கடம்பத்தூர் அடுத்து உள்ளது.இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் சடலங்களை எரிக்கவும், அடக்கம் செய்யவும் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே கேட் வழியாக சடலத்தை எடுத்து செல்வர். இந்நிலையில் ரயில்வே கேட்டை தாண்டி, சுடுகாட்டிற்கும், கிராமத்துக்கும் இடையே சுடுகாட்டுக்கு செல்லும் 200 மீட்டர் சாலையை அப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமித்து நிலமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் இறப்பு ஏற்படும்போது விவசாய நிலத்தில் இறங்கி சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 இதுகுறித்து, அக்கிராம மக்கள் தமிழக முதல்வர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், கடம்பத்தூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும்  இல்லை.  இந்நிலையில், நேற்று பானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஓசூரார்(70) என்பவர் இறந்துவிட்டார்.அவரது சடலத்தை நேற்று மாலை எடுத்துச் சென்ற கிராம மக்கள், சேறும், சகதியுமாக உள்ள விவசாய நிலத்தில் இறங்கி சுடுகாட்டிற்கு  கொண்டு சென்று எரித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக இதே நிலைதான் கிராமத்தில் உள்ளது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், கிராமத்தில் இறப்பு ஏற்படும்போது சடலத்தை ஒவ்வொரு முறையும் வயலில் இறங்கி எடுத்து செல்லும் அவல நிலை உள்ளது.
கடந்த 07.12.2014, 13.06.2016 ஆகிய நாட்களில் செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலைய தண்டவாளத்தில் சடலத்தை வைத்து ரயில் மறியல், அதன்பிறகு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை சுடுகாட்டு பாதையை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. உடனடியாக பாதையை மீட்டு சுடுகாட்டுக்கு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : field ,Kadugathoor ,
× RELATED 3 மாதங்கள் நடக்கிறது வயல்வெளியில் முதியவர் சடலம் மீட்பு