பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாணவன்: வைரல் வீடியோவால் பரபரப்பு

பூந்தமல்லி: பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை மதுரவாயல்
எம்.எம்.டி ஏ.காலனி பகுதியில் சட்டக்கல்லூரி மாணவன் ஒருவர், தனது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 11ம் தேதி இரவு நடுரோட்டில் நண்பர்களுடன்
கொண்டாடி உள்ளார். அப்போது அவரது நண்பர்கள் ரூபாய் நோட்டுகளால் ஆன பண மாலையை அவருக்கு அணிவித்து, தலையில் கிரீடம் வைத்துள்ளனர்.
பின்னர், அவருக்கு 4 அடி நீள வாளை பரிசாக கொடுத்தனர். வழக்கறிஞர் முத்திரை பொறிக்கப்பட்ட அந்த கேக்கை அந்த மாணவன் கத்தியால் வெட்டியுள்ளார்.

இதை அவரது நண்பர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக
பரவி வருகிறது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கத்தியால் கேக்கை வெட்டியது அதே பகுதியை சேர்ந்த காமேஷ் என்பதும்,
இவர் திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருவதும் தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு 100க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் பிரபல ரவுடி பினு தனது பிறந்த நாளை மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி
கொண்டாடினார். அது முதல் பட்டாகத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில்
பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : student ,
× RELATED தேசிய வரைபட கேக் வெட்டி சர்ச்சையில் நேபாள பிரதமர்