×

எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் வெளிப்புறங்களில் சுகாதாரத்தை முறையாக பராமரித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அமானுல்லாகான் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எழும்பூரில் உள்ள அரசு குழந்ைதகள் மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். உள்நோயாளிகளாகவும் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனை நுழைவு பகுதியில் உள்ள குப்பை தொட்டிகள் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன.  இந்த குப்பை நடைபாதைகளிலும் விழுகின்றன. குப்பை தொட்டிகளில் இருந்து கழிவுநீர் கசிந்து வெளியேறுகிறது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் உள்ள குப்பையை முறையாக அகற்றுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், நல்ல தரமான குப்பை தொட்டிகளை அந்த இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதில் கொட்டப்படும் குப்பை முறைப்படி அகற்றப்படும், என்று உறுதியளித்தார்.

சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், அந்த குப்பை தொட்டிகளை இடமாற்ற வேண்டும் என்றும், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையின் வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags : children ,hospital ,Egmore ,corporation ,
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!