போலீசாரை தாக்கிய அரசு ஊழியர் கைது: தப்பியவர்களுக்கு வலை

சென்னை: சென்னையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் பணிபுரிந்து வருபவர்கள் சண்முகம், பாண்டி, ராஜேஷ், ஸ்ரீ. இவர்கள் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோட்டில் உள்ள உணவகம் வெளியே சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது, மது போதையில் அவ்வழியே வந்த ஒருவர், போலீசார் மீது இடித்து விட்டு சென்றுள்ளார். இதுபற்றி போலீசார் கேட்டபோது, அந்த ஆசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் 15 பேருடன் மீண்டும் அங்கு வந்த அந்த ஆசாமி, அங்கிருந்த காவலர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுபற்றி ஆயுதப்படை போலீசார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் வருவதை கண்ட அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ஆனால், போதை ஆசாமியை மட்டும் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர், கனிம வளத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் நாவரசன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர். தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: