×

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்று காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கான எஸ்ஐ தேர்வில் 411 பேர் பங்கேற்பு

வேலூர், ஜன.14: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக நேற்று காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கான எஸ்ஐ தேர்வில் 411 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதனை டிஐஜி காமினி, எஸ்பி பிரவேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து எஸ்ஐ தேர்வுக்கு பலர் விண்ணப்பித்திருந்தனர். இதில் காவல்துறையில் பணி புரிபவர்களுக்கு 11ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கு 12ம் தேதியும் தேர்வு நடத்த அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் காவல்துறையில் பணிபுரிபவர்ளுக்கு 13ம் தேதி(நேற்று) தேர்வு மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் 1 மணி வரை பொதுப்பிரிவினருக்கான தேர்வு நடந்தது. இதில் 6 ஆயிரத்து 15 பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டன. அதில் ஆயிரத்து 416 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 4 ஆயிரத்து 554 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்நிலையில் 2வது நாளாக நேற்று காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கான எஸ்ஐ தேர்வில் பெண் காவலர்கள் 90, ஆண் காவலர்கள் 355 பேர் என்று மொத்தம் 445 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் பெண் காவலர்கள் 8 பேர், ஆண் காவலர்கள் 26 பேர் என்று மொத்தம் 34 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 411 பேர் மட்டும் தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை டிஐஜி காமினி, எஸ்பி பிரவேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : SI Examination for Police Service ,Vellore district ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...