×

போளூர் தாலுகாவிற்குட்பட்ட திண்டிவனம் ஊராட்சியில் 6 வார்டுகளை இணைத்து தனி ஊராட்சியாக பிரிக்க கோரி கிராம மக்கள் மனு

திருவண்ணாமலை, ஜன.14: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தனி ஊராட்சியாக பிரிக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. டிஆர்ஓ ரத்தினசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, திருமண நிதியுதவி, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவகத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார்.

குறைதீர்வு கூட்டத்தில், போளூர் தாலுகாவில் உள்ள திண்டிவனம் ஊராட்சியை தனியா பிரிக்க வேண்டும் என கோரி அத்திமூர் அருகே உள்ள அண்ணா நகர், ஜெய்தீம் நகர், காந்தி நகர் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் அனுமதிக்க முடியாது என கூறி, 5 பேரை மட்டும் அனுமதித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, போளூர் தாலுகாவிற்குட்பட்ட திண்டிவனம் ஊராட்சியில் வசித்து வருகிறோம். எங்கள் ஊராட்சியில் 6,440 வாக்காளர்கள் உள்ளனர். 40 வருடங்களுக்கு பிறகு திண்டிவனம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் மக்களுக்காக சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய குழு உறுப்பினர் பதவியும் சுழற்சி முறையில் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தேர்தலில் ஆதிதிராவிடர் சமுகத்தை சேர்ந்தவர்கள் தலைவராக வரமுடியவில்லை. இதனால், திண்டிவனம், களியம், பனப்பாம்பட்டு, களிம் போன்ற கிராமங்களுக்கு உட்பட்ட 6 வார்டுகளை இணைத்து தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதேபோல், மெய்யூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எங்கள் ஊராட்சியில் தலைவராக வெற்றி பெற்றுள்ளவர் போலியான சாதி சான்று வழங்கி வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி 20க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர்.

மேலும், விவசாயிகள் சங்கத்தினர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்கெட் கமிட்டியில் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். தரனி சக்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையினை ஜனவரி 13ம் தேதிக்குள் வழங்குவதாக அறிவித்தது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, நிலுவை தொகையை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டு வந்த பைகளை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

Tags : separation ,panchayat ,Polur Taluk ,Tindivanam ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு