திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நாட்கள் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் 46 ஆயிரம் பேர் விண்ணப்பம்

திருவண்ணாமலை, ஜன.14: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமில் 46 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், புதிய வாக்காளர்களை சேர்த்தும், திருத்தங்களை மேற்கொண்டும் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய கடந்த 4,5,11,12 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் பலர் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

அதில் 4 நாட்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 11 லட்சத்து 87 ஆயிரத்து 10 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதுதவிர வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக 2 லட்சத்து 86 ஆயிரத்து 360 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் கடந்த 4 நாட்களில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 370 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், ஏற்கனவே உள்ள திருத்தங்களை சரி செய்யவும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 46 ஆயிரத்து 363 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் திருத்தம், முகவரி மாற்றங்களுக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள் என திருவண்ணாமலை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Thiruvannamalai District ,
× RELATED மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு