×

பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல்

சிவகங்கை, ஜன.14: பொங்கல் பண்டிகையையொட்டி சிவகங்கையிலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர், திருச்சி, மதுரை, கோவை, திருப்பத்தூர், ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் திருப்பத்தூர் வழி காரைக்குடி, மதுரை, தேவகோட்டைக்கு அதிகமான பயணிகள் சிவகங்கையிலிருந்து பயணம் செய்வர். மதுரைக்கு சிவகங்கையிலிருந்து செல்லும் பஸ்களில் பெரும்பாலானவை தொண்டியில் இருந்து சிவகங்கை வழியாக மதுரை செல்லக்கூடியதாகும். சிவகங்கையிலிருந்து மதுரைக்கு நேரடியாக இயக்கப்படும் பஸ்கள் சில மட்டுமே. இந்த பஸ்களும் நாள் முழுவதும் சிவகங்கை-மதுரை செல்வன அல்ல. திருப்பூரிலிருந்து வரும் பஸ், இரவு நேரத்தில் சென்னை செல்லும் பஸ் உள்ளிட்டவை காலை நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மதுரைக்கு இயக்கப்படுகிறது.

தொண்டியிலிருந்து மதுரை செல்லும் அனைத்து பஸ்களும் சிவகங்கை வரும்போது அதிகப்படியான கூட்டத்துடனேயே காணப்படும். சிவகங்கையில் இருந்து செல்பவர்கள் நின்று கொண்டுதான் செல்ல வேண்டும். தற்போது பண்டிகை காலம் என்பதால் அதிகப்படியான கூட்டத்துடனேயே பஸ்கள் வருகிறது. இதனால் சிவகங்கையில் இருந்து செல்பவர்களுக்கு கடும் அவதி ஏற்படுகிறது. மேலும் சிவகங்கை பகுதியிலிருந்து ஏராளமானோர் திருப்பூர், கோவை, சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்கு வருவர். நாளை முதல் பொங்கல் பண்டிகைக்காக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் ஊர்களுக்கு செல்வர். நேரடியான பஸ்கள் இல்லாமல் பல்வேறு பஸ்கள் மாறி வரும் இவர்கள் பயனடையும் வகையில் சிவகங்கையிலிருந்து மதுரை, கோவை, சென்னை, திருப்பூர் மற்றும் காரைக்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பயணிகள் கூறுகையில், பண்டிகை காலங்களில் முக்கியமான ஊர்களுக்கு சிவகங்கையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என ஆண்டுதோறும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் நாள் விடுமுறை கிடைக்கும் என்பதால் அதிகப்படியானோர் ஊர்களுக்கு செல்வர்.  இப்பகுதியில் டவுன் பஸ்கள் குறைவு என்பதால் தொலை தூர பஸ்களிலேயே அருகில் உள்ள ஊர்களுக்கு செல்பவர்களும் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் மற்றும் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : passengers ,festival ,Pongal ,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்