பருத்தி, நிலக்கடலை, கரும்புக்கும் காப்பீடு செய்ய அழைப்பு

சிவகங்கை, ஜன. 14: சிவகங்கை மாவட்டத்தில் கரும்பு, வாழை, உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் வறட்சி, புயல், பெரு வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் மற்றும் பூச்சிநோய் தாக்குதலினால் விவசாயிகளுக்கு ஏற்படும்இழப்பினை ஈடு செய்யும் நோக்குடன் 2016- 17ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019- 20ம் ஆண்டில் இத்திட்டத்தில் காரிப்பருவ பயிர்களுக்கும், சிறப்பு பருவத்தின் நெல் பயிருக்கும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் நிலக்கடலை, பருத்தி, கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கும், மிளகாய், வெங்காயம், வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கும் பயிர் காப்பீடு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.297 செலுத்தி 31.01.2020க்குள்ளும், பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 17 செலுத்தி 15.02.2020க்குள்ளும், மிளகாய் பயிருக்கு ரூ. ஆயிரத்து 40 செலுத்தி 31.01.2020க்குள்ளும், வாழை பயிருக்கு ரூ.2 ஆயிரத்து 120 செலுத்தி 28.02.2020க்குள்ளும், வெங்காயத்திற்கு ரூ.ஆயிரத்து 215 செலுத்தி 15.02.2020க்குள்ளும் பயிர் காப்பீடு செய்யலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவதுடன் கடன் பெறாத விவசாயிகளும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு காப்பீடு பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம்.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பருத்தி நடவு மும்முரம்