×

நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் செயல்படுமா?

பரமக்குடி, ஜன.14:  மாவட்டத்தில் அரசு கட்டிடங்களில் பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சீரமைத்து, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,பள்ளிகள்,கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது. இதனை முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டதால் கடந்த சில ஆண்டுகளாக மழைநீரை சேமிக்காமல் வீணாகி வருகிறது. தமிழகத்தில் நிலத்தடிநீரை உயர்த்தும் நோக்கில் கடந்த 2001ல் மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டதால், புதிய கட்டிடங்கள் கட்டும்போது கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கவேண்டிய நிலை உருவானது.

ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால், ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு வடிகால்கள் அமைத்தவர்கள் முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டனர். தனியார் கட்டிடங்கள் மட்டும் இல்லாது அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கவனிப்பாரின்றி கரைந்து போனது. வீட்டு வசதி குடியிருப்புகள், குடிசைமாற்று நலவாரியத்தில் அமைக்கப்பட்ட வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புகள் வீணானது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த திட்டம் பின்பற்றப்பட வில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மழை பெய்தும், மழைநீரை சேமிக்க வழியின்றி தொடர்ந்து வீணாகி வருகிறது. மாவட்டத்தில் குறிப்பாக பரமக்குடி பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய், ஊரணிகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் மரங்களும், புதர்செடிகள், பிளாஸ்டிக் குப்பைகளும் நிரம்பி உள்ளதால், மழைநீரை தேக்க வழியின்றி நிலத்தடி நீர்மட்டம் படிபடியாக குறைந்துவிட்டது.

இதுகுறித்து விவசாயி கிருஷ்ணன் கூறுகையில், முதல்கட்டமாக அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளின் குழாய்கள் உள்ளிட்ட சில காரணங்களால் சேதமடைந்து உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கு எடுத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோல் குடியிருப்பு கட்டிடங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சோதனை செய்து வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் சரி செய்யவேண்டும். வரும் ஆண்டுகளில் மழைநீரை சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை