×

விபத்துக்களை குறைக்க அரசு போக்குவரத்துக் கழக டிரைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

தேனி, ஜன. 14:  மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வந்தன. விபத்து பலிகளும் அதிகரித்து வந்தன. பலியானோருக்கு இழப்பீடு வழங்க முடியாமல் அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழகம் விபத்துக்களின் எண்ணிக்கையினை குறைப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அரசு பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு புத்தாக்க பயிற்சி, யோகா, தியான பயிற்சிகள் வழங்கப்பட்டன. கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாதிரி பயிற்சி வாகனங்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்து இல்லாமல் பஸ் ஓட்டியவர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்படி எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக விபத்துக்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக்கழக மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் போக்குவரத்துக்கழகங்கள் இணைந்துள்ளன. இந்த மூன்று போக்குவரத்துக்கழகங்களிலும் கடந்த 2018ம் ஆண்டு 311 சிறு விபத்துக்களும், 139 சாதாரண விபத்துக்களும், 159 பெரிய விபத்துக்களும் ஏற்பட்டன. 2019ம் ஆண்டு 216 சிறு விபத்துக்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
இதில் வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது. சாதாரண விபத்துக்களின் எண்ணிக்கை 120 ஆக குறைந்துள்ளது. பெரிய விபத்துக்களின் எண்ணிக்கையும் 139 ஆக குறைந்துள்ளது. மொத்தமாக காயமடைந்தோர், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 65 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : state transport corporation drivers ,accidents ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி