×

பொருளாதார சூழ்நிலையை திசைதிருப்ப மத்திய அரசு மக்களை பிளவு படுத்துகின்றது

செங்கல்பட்டு, ஜன. 14: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை சார்பில்  குடியுரிமையில் மதத்தைப் புகுத்தும் மத்திய அரசை கண்டித்து சிறப்புக் கருத்தரங்கம் செங்கல்பட்டில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராம்குமார் தலைமை வகித்தார். ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்  மௌலானா அப்துல் அஹத் வரவேற்றார்.தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர்  ப.அப்துல் சமது, காயிதே மில்லத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் தாவூத்மியாகான்,  அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிறுவனர் எல்.ஏசுமறியான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர், திமுக நகர செயலாளர் நரேந்திரன்,  காங்கிரஸ் நகர தலைவர், பாஸ்கர், மதிமுக மாவட்ட பொருளாளர் ராமலிங்கம்,  திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் சுந்தரம், மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ஷாஷகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், பேராசிரியர் அருணன் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் என்பது மத அடிப்படையில் இந்திய குடியுரிமையை தீர்மானிக்கும் ஓர் அநியாய சட்டம்.  இந்த சட்டம் நம்முடைய அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற குடியரசு என்பதற்கு நேர் எதிரானது. இந்த சட்டத்தை ஆதரித்ததன் மூலம் அதிமுக அரசு மிகப் பெரிய வரலாற்று பிழையைச் செய்துள்ளது. இந்த பாவத்துக்கு பரிகாரமாக தமிழக அரசு சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராகத் தீர்மானத்தை கொண்டுவரவேண்டும்.பிரதான எதிர்க்கட்சியும் இத்தகைய தீர்மானத்தை வேண்டுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் தீர்மானம் ஒருமனதாக கொண்டு வரப்படும் வாய்ப்பு தற்போது உள்ளது. இந்திய, தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிமுக அரசு இத்தகைய தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்.

மக்கள் தொகை  பதிவேடு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் கணக்கெடுப்பு அல்ல.  இதன் நோக்கம் இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகின்ற சதிகார நோக்கமாக  உள்ளது. இதை மத்திய அரசு மக்கள் இடையே திணிக்க துடிக்கிறது. இதையும் மாநில அரசு நிராகரிக்க வேண்டும். இப்பிரச்னையில் கேரள அரசை போலவே தமிழக அரசும் நடக்க வேண்டும். இதனை தொடர்ந்து தேசிய குடிமக்கள்  பதிவேடு வருமேயானால் முஸ்லீம் மக்கள் மட்டுமல்ல இந்துக்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் அது பாதிக்கும். 106 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். குடியுரிமை சட்டம் பறிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக வாக்குரிமை பறிக்கப்படும். இவை அனைத்துக்கும் பின்னால் பாஜவின் தேர்தல் சதி இருப்பதாகவே மக்கள் ஒற்றுமை மேடை கருதுகிறது. தமிழக மக்கள் இந்த 3க்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.

இந்த சட்டத்தின் ஆபத்துக்கு நடைமுறை ஆதாரம் இருக்கிறது.  நம் நாட்டின் முதல் குடியரசு தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமதுவின் சகோதரர் குடும்பத்திற்கு இந்தியக் குடியுரிமை இல்லை என மறுக்கப்பட்டுள்ளது. அவர்களும் அந்த 7 லட்சத்தில் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லீம் மக்கள் மட்டுமல்ல.  இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லீம்களுக்கும் ஆபத்து என்பதற்கு இது உதாரணம்.
அதேபோல் கார்கில் யுத்தத்தில் பங்கு கொண்டு  மிகப் பெரிய வீரச் செயலை செய்த  அதற்கான வீரப் பதக்கத்தை பெற்ற முஸ்லீம் வீரனின் குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சட்டம் முஸ்லீம் மக்கள் மட்டுமல்ல இந்துக்கள் உள்பட ஒட்டு மொத்த இந்திய மக்களையும் பரிதவிக்கும் நிலையை இந்த மூன்றும் செய்கிறது. நாடு தத்தளிக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து மக்களை திசை திருப்பும்,  மக்களைச் சீர்குலைக்கும் வேலையை மத்தியில் ஆளும் பாஜ  அரசு செய்கிறது. இதை எதிர்த்து தமிழக மக்கள் மேடை தொடர்ந்து போராடும் என்றார்.

Tags : government ,population ,
× RELATED பரபரப்பான சூழ்நிலையில் காணொலி மூலம்...