முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்

புதுச்சேரி,  ஜன. 14: முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ மீது கட்சி தலைமையிடம் நேரில் புகார் அளிக்க முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். பாகூர் மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை, ஆம்புலன்சுக்கு டீசல் இல்லையெனக்கூறி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு, முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினார். அப்போது ஆளத்தெரியவில்லை முதல்வர் பதவி விலக வேண்டும், மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆளும் கட்சியில் இருந்து கொண்டே முதல்வரை விமர்சித்து கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த முதல்வர், தனவேலு எம்எல்ஏவின் நற்சான்றிதழ் எதுவும் அரசுக்கு தேவையில்லை. அவர் மீது கட்சி தலைமையிடம் புகார் அளிப்பேன் என தெரிவித்திருந்தார்.

இதனால் ஆவேசமடைந்த தனவேலு, அமைச்சர்கள் மீது ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இது தொடர்பாக சஞ்சய் தத்திடம் புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.  மோசமான ஆட்சி நடைபெறுவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து ஊழல் பட்டியலை அளிக்கவுள்ளதாக கூறியிருந்தார். இதற்கிடையே கட்சிக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வரும் தனவேலு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அறிக்கை அனுப்பியுள்ளோம். இதன் மீது கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும் காங். கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர், நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளனர்.  முதல்கட்டமாக புதுச்சேரி மேலிடப்பொறுப்பாளரும், அகில இந்திய செயலாளருமான சஞ்சய் தத்திடம் இப்பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர்.

பின்னர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக்கை சந்தித்து தனவேலு குறித்தும், தற்போதைய புதுச்சேரி அரசியல் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிவிகிறது. அவரது ஆலோசனையையேற்று  ராகுல்காந்தியின் ஆலோசகர் கேசி வேணுகோபாலை சந்தித்து, நடந்த விபரங்களை தெரிவித்து,  ராகுல்காந்தி, சோனியாகாந்தியை நேரில் சந்தித்து பேச நேரம் கேட்கின்றனர். அனுமதி கிடைத்தவுடன் தனவேலு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள் என தெரிகிறது. அதன்படி   பாகூர் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். எவ்வித கட்சி பதவியிலும் இல்லை. காங்கிரஸ் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க முடியும். இருப்பினும் அவர் எம்எல்ஏவாக இருப்பதில் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. இது போன்ற நிலையில் எம்எல்ஏவாக இருக்கும் தனவேலுவை நீக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: