பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா

புதுச்சேரி, ஜன. 14: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அனைத்து துறை மாணவிகளும் பாரம்பரிய உடை அணிந்து, வண்ண கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, புதுப்பானையில் சர்க்கரை பொங்கல் மற்றும் சிறுதானிய பொங்கலிட்டனர். மேலும், ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் மனையியல் துறையின் கீழ் இயங்கும் மழலையர் பள்ளி மாணவ, மாணவிகள் பட்டு வேட்டி, பாவாடை சட்டை அணிந்து பாரம்பரிய முறையில் பொங்கலிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஒரே பாரதம், உன்னத பாரதம் அமைப்பின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாணவி ஹரிதா ஒரே பாரதம் உன்னத பாரதம் அமைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாணவிகள் அனிஷ்யா பிரேமி, செந்தமிழ் ஆகியோர் பாமனின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைத்தனர். மாணவிகள் நூருல் முபீனா, ஜனனி ஆகியோர் பாமனின் பாரம்பரிய உடை அணிந்து நடனம் ஆடினர். மாணவி அருந்ததி பரதநாட்டியம் ஆடினார். மாணவி திவ்யா நன்றி கூறினார். இதில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இதனால் கல்லூரி வளாகமே களைகட்டியிருந்தது. இந்நிகழ்ச்சியை நோடல் அதிகாரிகள் உமாராணி, அலமேலு மங்கை ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Related Stories: