×

குடிநீர் கேட்டு நீர்த்தேக்க தொட்டிக்கு மாலை

உளுந்தூர்பேட்டை, ஜன. 14:
உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கிராம மக்கள் மாலை அணிவிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சேந்தமங்கலம் கிராமம். இந்த கிராமத்தில் ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், குடிநீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் பயன்படுத்தாமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த இந்த கிராமத்தை சேர்ந்த சாமிதுரை, மணி, சீனு உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் நேற்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவிப்பதற்காக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு வந்த திருநாவலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜி, திருநாவலூர் பிடிஓ ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் 10 நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.  இதையேற்று பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். குடிநீர் கேட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கிராம மக்கள் மாலை அணிவிக்க சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை