×

தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி துணை தலைவரின் ஆதரவாளருக்கு கத்தி வெட்டு

நெய்வேலி, ஜன. 14: நெய்வேலியில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் ஊராட்சி துணை தலைவரின் கணவர் மற்றும் ஆதரவாளரை எதிர் தரப்பினர் தாக்க முயன்ற போது ஆதரவாளருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலியை அடுத்த இந்திரா நகர் ஊராட்சியில் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராமதாஸ் மனைவி உமா (36). இவர் இந்திரா நகரில் வசித்து வருகிறார். இவருக்கும் பி-பிளாக் மாற்றுக்குடியிருப்பில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் உமாவின் கணவர் ராமதாஸ், அவரது ஆதரவாளர் முருகன் மகன் சஞ்சய் ஆகியோர் பி-பிளாக் மாற்றுக்குடியிருப்பில் உள்ள பச்சைவாழியம்மன் கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் தரப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 5க்கும் மேற்பட்டவர்கள் ராமதாஸ் மற்றும் சஞ்சய்யை தாக்க முயன்றனர். இதில் ராமதாஸ் தப்பிவிட்டார். சஞ்சய்க்கு கத்தி வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து பாரதி (21), வேலாயுதம் (34), அஜித் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முன்விரோத தகராறில் ஊராட்சி துணைத்தலைவரின் ஆதரவாளர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் நெய்வேலியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : supporter ,panchayat vice-president ,
× RELATED ‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என கூறி...