×

பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட அரசியல் கட்சியினர்

புவனகிரி, ஜன. 14:   பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சமீப காலங்களாக குடிநீரில் அசுத்த நீர் கலந்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. இதுபோல் பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளை செல்லும் சாலையில் உள்ள வெள்ளாற்று பாலத்தின் இணைப்பு சாலை சரியில்லை. அதனால் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் குடிநீர், சாலை பணிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து திமுக, மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக பரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் முத்து. பெருமாள், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் எழில்வேந்தன், இந்தக் கட்சிகளின் நகர செயலாளர்கள் முனவர்உசேன், வேல்முருகன், இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பரங்கிப்பேட்டை பேருராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் குழாயில் வரும் அசுத்தமான தண்ணீரை பாட்டிலில், பிடித்துக் கொண்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் சிலர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுங்கள் என கூறினர்.

இந்நிலையில் பேரூராட்சி செயலாளர் சீனிவாசன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து போராட்டம் நடத்த வந்தவர்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : parties ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...