திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெற அழைப்பு

திண்டுக்கல், ஜன. 14: திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை திட்டத்தின் கீழ பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வி தகுதியினை பதிவு செய்து விட்டு 5 ஆண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 31.12.2019 உடன் முடிவடைந்த காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதோர் மற்றும் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி போன்ற கல்வி தகுதியினைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 31.12.2019 வரை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் ஜனவரி 2020 முதல் உதவித்தொகை பெற தகுதியுடையவர்களாவார்கள். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். இத்தொகை பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000 ஆகும். எனவே, குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பின்படி தகுதியுள்ள பயனாளிகள் இதர தகுதிகளுக்குட்பட்டு விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம். தமிழகத்திலேயே கல்வி முடித்தவர்களாகவும், வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெற்றிருக்க கூடாது. பள்ளி, கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்க கூடாது. இத்தகுதியுள்ளோர் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித்தகுதி சான்றுகளுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 29.02.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு பிரதி மாதம் ரூ.200ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.300ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.400ம் மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600ம், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு வரை படித்தவருக்கு பிரதி மாதம் ரூ.600ம், மேல்நிலைக்கல்வி படித்தவருக்கு ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000ம் உதவித்தொகையாக அந்தந்த காலாண்டின் முடிவில் பயனாளியின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருவோர் ஓராண்டு முடித்திருந்தால் தொடர்ந்து பெற சுய உறுதிமொழி ஆவணத்தை உரிய ஆவணங்களுடன் 29.02.2020க்குள் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்கள் சுய உறுதி ஆவணம் சமர்ப்பிக்க தேவையில்லை. ஏற்கனவே 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. மேலும், தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைத்து, அதன் விவரத்தினை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதால் தங்களுக்கு கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Dindigul district ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் ஆட்சி...