×

உயிருக்கு உலை வைக்கும் உலர் பணி கதிர்களை பிரிக்க களம் அமைத்து தரப்படுமா?

பட்டிவீரன்பட்டி, ஜன. 14: பட்டிவீரன்பட்டி பகுதியில் சோளம், கம்பு பயிர்களை உலர வைக்கும் பணி சாலையில் நடப்பதால் வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ளது சித்தையன்கோட்டை, கதிர்நாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம், நெல்லூர், சிங்காரக்கோட்டை, சித்தரேவு, ஒட்டுப்பட்டி கிராமங்கள். இப்பகுதிகளில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சோளம், கம்பு, நிலக்கடலை போன்ற மானாவரி பயிர்களை விவசாயம் செய்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் இப்பயிர்கள் நன்கு விளைந்து தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. அறுவடை செய்த சோளம், கம்பு பயிர்களை பிரித்தெடுக்க உலர்களம் இல்லாததாலும், இயந்திரம் கொண்டு கதிர்களிலிருந்தது சோளம், கம்புவை பிரித்தெடுக்க அதிக செலவாகின்ற காரணத்தினாலும் தற்போது அய்யம்பாளையம்- சித்தையன்கோட்டை மெயின்ரோடு கதிரடிக்கும் களமாக மாறியுள்ளது. இந்த மெயின்ரோட்டில்தான் பெரும்பாறை, தாண்டிக்குடி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஆத்தூர், செம்பட்டி போன்ற பகுதிகளுக்கு அதிகளவில் வாகன போக்குவரத்து இருக்கும். ஆனால் பயிர்களை காய வைத்திருப்பவர்கள் ஆபத்தை உணராமல் ரோட்டின் மைய பகுதியில் நின்று வேலை செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சோளம், கம்பை பிரித்தெடுத்து சாக்குகளில் நிரப்பும் பணி முடிந்ததும், கதிர்களை ரோட்டின் அருகாமையிலே வைத்து தீ வைக்கின்றனர். இதனால் ரோடு முழுவதும் புகை மண்டலமாகிறது. அப்போது உருவாகும் தூசியால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் வாகனங்கள் எதிர் எதிரே வருவது தெரியாமல் விபத்திற்குள்ளாகும் அபாயமும் உள்ளது. மேலும் சோளம் வழுக்கும் தன்மையுடன் இருப்பதால் டூவீலர்களில் வேகமாக செல்வோர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே பயிர்களை உலர வைத்து காய வைக்க உலர்களமும், கதிர்களில் இருந்து சோளம், கம்பத்தை பிரித்தெடுக்கும் இயந்திர வசதியும் விவசாய துறை சார்பில் அரசு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாவரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்