மானூரில் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம்

மானூர், ஜன. 14:  நெல்லை தாலுகாவில் இருந்து மானூர், தாழையூத்து, கங்கைகொண்டான் ஆகிய 3 பிர்க்காக்களை தனியாக பிரித்து மானூர் தாலுகா கடந்த 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் கங்கைகொண்டான் மக்கள் நெல்லை தாலுகாவிலேயே இடம் பெற விரும்பியதால் கங்கைகொண்டான் மீண்டும் நெல்லையில் இணைக்கப்பட்டன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி தலைமையிடமாக கொண்டு தென்காசி தனி மாவட்டமாக கடந்த அக்டோபர் 12ம்தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள வன்னிகோனந்தல் பிர்க்கா மானூருடன் இணைக்கப்பட்டு மானூர் தாலுகா 3 பிர்க்காக்களாக 32 கிராமங்கள் உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன.மானூர் தாலுகா அலுவலகம் பஜாரிலுள்ள களக்குடி சாலையில் ரூ.2.62 கோடியில் நவீன வசதிகளுடன் 2 தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டிடத்தின் தரை தளத்தில் வட்டாட்சியர் அறை, அலுவலக அறை, விசாரணை அறை, கணினி அறை, ஆண்கள், பெண்களுக்கு என பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும் தனித்தனியே கழிப்பறைகளும், முதல் தளத்தில் பதிவேடுகள் வைப்பறை, கூட்ட அரங்கு மற்றும் கீழ்தளத்தை போல முதல் தளத்திலும் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10 மணி அளவில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
 இதைத்தொடர்ந்து மானூர் தாலுகா அலுவலகத்தில் டிஆர்ஓ முத்துராமலிங்கம், சப்கலெக்டர் மணிஸ் நாரணவே, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான தச்சை கணேசராஜா, அதிமுக அமைப்பு செயலாளரும், ஆவின் சேர்மனுமான சுதா பரமசிவம், முன்னாள் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.நிகழ்ச்சியில் மானூர் தாசில்தார் மோகன், தலைமை துணை தாசில்தார் முத்துலட்சுமி, மண்டல துணை தாசில்தார் மாரியப்பன், தேர்தல் துணை தாசில்தார் புஸ்பராணி, வட்ட வழங்கல் அலுவலர் சண்முகவேல் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், 3 பிர்க்காக்களை சேர்ந்த விஏஓக்கள், ஆர்ஐகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : taluk office building ,Manoor ,
× RELATED விஏஓக்களுக்கு செலவின தொகை வழங்க வேண்டும்