×

மாணவியின் தற்கொலைக்கு காரணமான டிக்- டாக் செயலிக்கு தடை: கலெக்டரிடம் மனு

திருப்பூர், ஜன.14:திருப்பூர்கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்கூட்டம் கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமையில், நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
காங்கயம் வட்டம் நிழலி கிராமம் சக்திவிநாயகபுரத்தை சேர்ந்த  தம்பதி அளித்த மனுவில் கூறியதாவது:அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எனது 16 வயது மகள், 10ம் வகுப்பு படித்து வந்தார். 6 மாதத்துக்கு முன்பு பல்லடம் அருகே செலக்கரச்சல் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் டிக்டாக் வீடியோ மூலம், எனது மகளிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அவர் எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த நிலையில் எனது மகள் கடந்த மாதம் 19ம் தேதி, வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கோவை அரசு  மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 27ம் தேதி இறந்தார். இது குறித்து, காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வேல்முருகன் கைது செய்யப்பட்டார். எனது மகள் இறப்புக்கு காரணமாக அமைந்த டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அமராவதிபாளையம் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் சுமார் 60 பேர் வசித்து வருகிறோம். அனைவரும் கூலித்தொழிலாளிகள். எங்களுக்கு தனி மயானம் இல்லை.
ஆதலால்,  50 ஆண்டுகளாக இறந்தவர்களை சாலை ஓரத்தில் அடக்கம் செய்து வருகிறோம். சமீபகாலமாக சாலை பாரமரிப்பு, கேபிள் பதிப்பது, குடிநீர் குழாய் அமைப்பது போன்ற பணிகளுக்காக சாலையில் புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்புக்கூடுகளை அப்படியே அள்ளி போட்டுவிடுகின்றனர். எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மயானம் இல்லாததால், கல்லறை கட்டி கல்லறைத் திருநாள் பிரார்த்தனை செய்ய முடியாமல் உள்ளோம். ஆகையால், எங்கள் ஊரில் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை முறைப்படி அளந்து, அங்கிருக்கும் புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு மயான வசதியை செய்துதரவேண்டும்.  

நொய்யல்  ஆற்றங்கரையில் வசிப்பவர்கள் அளித்த மனு: பல ஆண்டுகாலமாக நொய்யல் ஆற்றங்கரையில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வீரபாண்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கினார்கள். இதற்கு முன்பணமாக ரூ. 10 ஆயிரம் செலுத்த சொன்னார்கள். அதை மிக சிரமப்பட்டு செலுத்தினோம். இந்நிலையில் மீண்டும் 70 ஆயிரம் செலுத்த சொல்லி உள்ளனர். எங்களால் அவ்வளவு தொகை ஒரே சமயத்தில் செலுத்த இயலாது. ஆகவே, எங்களுக்கு வீடு வழங்க வேறு வழி கூற வேண்டும். இல்லையெனில், நாங்கள் செலுத்திய ரூ. 10 ஆயிரம் ரூபாயை திரும்ப எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த யுகாஷினி (21) அளித்த மனு: எனது கணவர் கலையரசன். எங்களுக்கு 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆனது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. இந்நிலையில் எனது மாமியார் ருக்மணி, வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். ஏற்கனவே கணவருக்கு அரசு வேலை வாங்க ஒன்றரை லட்சம் கேட்டார். அதன்பின்னர் கடன் இருந்ததற்காக நகைகளை கேட்டு வாங்கினார். தற்போது மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், ரூ. 2 லட்சம் கேட்டு அடித்து, துன்புறுத்துகிறார். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் மாமியார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : student suicide ,collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...