சீரான குடிநீர் வழங்க கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

திருப்பூர், ஜன.14: திருப்பூர் மாநகராட்சி 37வது வார்டு பாரதிநகர் பொதுமக்கள், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் நேற்று மனு அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: பாரதிநகர், வ.உ.சி.நகர், செட்டிபாளையம், பழநியாண்டவர் நகர், எல்.எஸ்.சி நகர் மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக மாநகராட்சி முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் தண்ணீருக்கு பெரும் சிரமப்படுகிறோம். குடிநீர் தட்டுப்பட்டால் எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குழாயில் வரும் தண்ணீர் 4 நாட்களுக்கு மட்டுமே வீட்டில் பயன்படுத்த முடிகிறது. இதனால் எஞ்சிய நாட்களுக்கு குடிக்க மற்றும் பிற தேவைகளுக்கு, தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தண்ணீர் தட்டுப்பட்டால் இப்பகுதி வசிப்போர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.  மாநகரின் மற்ற வார்டுகளை எங்களுக்கும் சீரான இடைவெளியில் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மனுவை பெற்ற மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: