ஜல்லிப்பட்டி ஊராட்சியில் தொட்டி உடைந்து 3 மாதங்களாக வெளியேறும் குடிநீர்

உடுமலை, ஜன.14: ஜல்லிப்பட்டியில் கீழ்நிலை தொட்டி உடைந்து கடந்த 3 மாதமாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள 118 கிராமங்கள் மற்றும் 5 பேரூராட்சிகளுக்கு அமராவதி ஆற்றில் இருந்தும், தாமரைப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, ரூ.84 கோடி செலவில், திருமூர்த்தி அணையில் இருந்து புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தளி, ஜல்லிப்பட்டி, குறிச்சிக்கோட்டை, குமரலிங்கம், கொழுமம், கண்ணாடிபுத்தூர், முள்ளிவலசு வழியாக குடிநீர் குழாய் செல்கிறது.இந்நிலையில், ஜல்லிப்பட்டியில் உள்ள கீழ்நிலை தொட்டியில் ஸ்லாப் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த 3 மாதமாக இதே நிலை தொடர்கிறது. தினசரி 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதனால் கிராம மக்கள் சரிவர குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுள்ள நிலையில், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, கீழ்நிலை தொட்டியை சீரமைத்து, குடிநீர் விரயமாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: