×

கரும்பு விலை கேட்டாலே ‘கசக்குது’

ஊட்டி,  ஜன. 14:ஊட்டியில் கரும்பு விலை கேட்டாலே கசக்கும் அளவிற்கு ‘கிடு  கிடு’வென விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  பொங்கல்  பண்டிகையின்போது, கரும்புகள், மஞ்சள் கொத்து, வாழை போன்றவைகள் வைத்தே  பொங்கல் வைக்கின்றனர். குறிப்பாக, கரும்புகள் இன்றி யாரும் பொங்கல் வைக்க  மாட்டார்கள். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து  பொருட்களுமே சமவெளிப் பகுதிகளில் இருந்தே நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு  வரப்படுகிறது. கரும்பு, வாழை, மஞ்சள், கூழைப் பூக்கள் உள்ளிட்ட அனைத்துமே  கொண்டு வரப்படுகிறது. லாரி வாடகை, தூக்கு மற்றும் இறக்கு கூலி என செலவுகள்  அதிகம் என்பதால், சமவெளிப் பகுதிகளை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில்  கரும்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்குமே சற்று விலை கூடுதலாக இருக்கும். இருந்தபோதிலும், பொதுமக்கள் வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து அவைகளை  வாங்கிச்செல்வது வழக்கம். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஊட்டிக்கு  கரும்பு, வாழை, மஞ்சள் உட்பட அனைத்து பொருட்களும் நேற்று முன்தினமே வந்து  சேர்ந்தன. இவற்றை நேற்று முதல் பொதுமக்கள் வாங்க துவங்கிவிட்டனர்.

 மேலும்  மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் கரும்பிற்கு மாறுபட்ட விலை வைத்து  விற்பனை செய்யப்படுகிறது. எனினும், பெரும்பாலான பகுதிகளில் கரும்பு ஒன்று  ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து கரும்பு  வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு கரும்பு ஒன்று அதிகபட்சமாக ரூ.40  முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த  காரணத்தினால் கரும்பு உட்பட அனைத்து விவசாயமும் பாதித்து இருந்தது. ஆனால்,  இம்முறை கரும்பு நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி.,  மற்றும் லாரி வாடகை உயர்வு என பல்வேறு பிரச்னைகளால் விலை இரு மடங்கு அதிகம்  வைத்து விற்பனை செய்ய வேண்டியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், குறிப்பாக  ஊட்டி மார்க்கெட்டில் கரும்பு விலை கேட்டாலே, பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து  வருகின்றனர். இதனால், இம்முறை பெரும்பாலான வீடுகளில் கரும்பு இருக்காது  என்பதில் ஆச்சிரியமில்லை.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி