×

மறுதேர்தலில் அதிகாரியை மாற்ற டிஎன்பாளையம் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ஈரோடு, ஜன.14: மறுதேர்தல் நடக்கும் போது தற்போதுள்ள தேர்தல் அதிகாரியை நியமிக்க கூடாது என டிஎன் பாளையம் கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் (டிஎன் பாளையம்) ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 7 பேர் தி.மு.க.வையும், 3 பேர் அ.தி.மு.க.வையும் சேர்ந்தவர்கள். ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றும் என்ற நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த தலைவர், துணைத்தலைவர் தேர்தலின் போது அ.தி.மு.க. உறுப்பினர் நடராஜ் வாக்கு சீட்டுகளை கிழித்து வீசிவிட்டு வாக்கு பெட்டியை தூக்கி சென்றுவிட்டார்.இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வாக்கு பெட்டியை தூக்கி செல்லும் போது தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, மறுதேர்தல் நடத்தும் போது தற்போதுள்ள தேர்தல் அதிகாரியை மாற்றிவிட்டு வேறொரு அதிகாரியை நியமித்து தேர்தல் நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து டிஎன் பாளையம் 9வது வார்டு கவுன்சிலர் பூமா விஜயலட்சுமி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : தலைவர் தேர்தலுக்கான மறைமுக தேர்தல் கூட்டமன்ற கட்டிடத்தில் நடைபெற்று கொண்டிருந்த போது அனைவருக்கும் வாக்குசீட்டு கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனைவரும் தயாராக இருந்தனர். அப்போது, அ.தி.மு.க. கவுன்சிலர் நடராஜ் என்பவர் வாக்களிக்க அழைக்கப்பட்டார். அப்போது, தேர்தல் அதிகாரி கையில் இருந்த வாக்குசீட்டை பறித்து கிழித்து வீசி விட்டு வாக்குபெட்டியை தூக்கி சென்றுவிட்டார்.இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால், நடராஜ் மீது தேர்தல் அதிகாரி என்ற முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஒத்திவைக்கப்பட்டுள்ள தலைவர் தேர்தல் மீண்டும் நடைபெறும் போது தற்போது உள்ள தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை இல்லாததால் வேறு ஒரு அதிகாரியை நியமனம் செய்து நேர்மையான முறையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : DNPalayam Councilors ,officer ,re-election ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...