ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன.14:  மறைமுக தேர்தலில் சட்ட விதிகளை மீறி செயல்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 31ம் தேதி இருகட்டங்களாக நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது.  இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஒன்றியங்களில் மறைமுக தேர்தல் சுமூகமாக நடந்தது. ஈரோடு ஒன்றியத்தில் கவுன்சிலர்களாக தி.மு.க. 3 இடமும், அ.தி.மு.க. 3 இடமும் பிடித்து சமநிலையில் இருந்தது. மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

டிஎன்.பாளையம் ஒன்றியத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க. தலைவர் பதவியை கைப்பற்றும் என்ற நிலையில் இருந்தபோது, அ.தி.மு.க. உறுப்பினர் நடராஜ் என்பவர் வாக்குபெட்டியை தூக்கி சென்றார். இதனால், அந்த ஒன்றியத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மத்தியிலும், பொதுமக்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதேபோல், விழுப்புரம், விருதுநகர், கடலூர் போன்ற மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டனர். இந்த செயல்களை கண்டித்தும், விதிமுறை மீறி செயல்பட்டவர்களை பாரபட்சமின்றி கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதில், ஈரோட்டில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை பணிக்கு வந்த ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் மதிய உணவு இடைவேளையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: