ஓராண்டாக பழுதாகி கிடக்கும் செல்போன் டவரால் பரிதவிக்கும் மக்கள்

ஈரோடு, ஜன.14: சத்தியமங்கலம் அருகே மலை கிராமத்தில் பழுதடைந்த செல்போன் டவர் ஓராண்டுக்கும் மேலாக சீரமைக்கப்படாததால் தொலைத்தொடர்பு வசதி இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடம்பூர் ஊராட்சியில் குன்றி மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் குஜ்ஜம்பாளையம், நாயக்கன்தொட்டி, பெரிய குன்றி, சின்ன குன்றி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குன்றி கிராமத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இந் நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு செல்போன் டவர் பழுதடைந்ததால் தொலைதொடர்பு சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பின், அவை சரி செய்யப்படவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மலைக்கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆம்புலன்ஸ் சேவை கூட பெற முடியாத நிலையில் உள்ளனர்.இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முயற்சியால் பிஎஸ்என்எல் செல்போன் டவர் அமைக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி வனத்துறையினரும் பயனடைந்து வந்தனர். ஆனால், கடந்த ஓராண்டாக செல்போன் டவர் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து பலமுறை பிஎஸ்என்எல் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் சரி செய்யாமல் விட்டு விட்டனர். இதனால், வெளியூர்களுக்கு வேலைக்கு சென்றுள்ள பெற்றோர்களை கூட குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக ஆம்புலன்ஸ் சேவைக்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே, பிஎஸ்என்எல் நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>