×

பழநி ஜிஹெச்சில் சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி

பழநி, ஜன. 14: பழநி அரசு மருத்துவமனையில் நடந்த மூலிகை கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர். தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவ பிரிவின் சார்பில் சித்தர்கள் திருவிழா, மூலிகை கண்காட்சி, உணவு திருவிழா போன்றவை நடந்தது. பழநி சப்கலெக்டர் உமா தலைமை வகித்தார். டிஎஸ்பி விவேகானந்தன், தாசில்தார் பழனிச்சாமி, பழநி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர். உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழநி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர். மகேந்திரன் வரவேற்று பேசினார். விழாவில் சித்த வைத்தியத்தின் நன்மைகள், வீட்டு மருத்துவத்திற்கு தேவையான மூலிகை பொருட்களின் கண்காட்சிகள் நடந்தன. கண்காட்சியில் சத்தான பழங்கள், கருஊமத்தை, ஊமத்தை, தேள்கெடுப்பு, பூலப்பூ, நாகதாலி, கோவைச்செடி, திருநீற்றுச்பச்சிலை, நந்தியா வட்டம், முடக்கத்தான், கல்யாணமுருங்கை, குப்பைமேனி, வெண்சங்கு புஷ்பம், கேசவர்த்தினி, நித்தியக் கல்யாணி, இரண கள்ளி, தும்பை, துத்தி கீரை, சிற்றரத்தை, அத்தி போன்ற அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலிகை பொருட்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அவற்றை உண்பதால் தீரும் நோய் விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. கண்காட்சியை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுச் சென்றனர்.

Tags : Siddha Medicinal Herbal Exhibition ,
× RELATED பழநி ஜிஹெச்சில் சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி