குஜிலியம்பாறை கோட்டநத்தத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.2.98 கோடி முறைகேடு கலெக்டரிடம் புகார்

திண்டுக்கல், ஜன. 14: குஜிலியம்பாறை கோட்டநத்தம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.2.98 கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். குஜிலியம்பாறை தாலுகா, கோட்டநத்தம் ஊராட்சி வசந்தகதிர்பாளையத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘

எங்கள் பகுதியில் கடந்த 2017 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை நடந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் சுமார் ரூபாய். 2 கோடியே 98 லட்சத்து 42 ஆயிரத்து 732 அளவிற்கு ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை அபராதத்துடன் வசூல் செய்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் அரசு வழங்கும் சட்ட கூலியை குறைக்காமல் வாரம்தோறும் வழங்க வேண்டும். வரும் ஜன.26ம் தேதி குடியரசு தினத்தன்று நடக்க இருக்கும் கிராமசபை கூட்டத்தில் கோட்டாநத்தம் ஊராட்சியில் நடந்த ஊழல் முறைகேடு சம்பந்தமாக பொதுமக்கள் பார்வையில் தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஊழல் முறைகேடு நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. கோட்டாநத்தம் ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக கொடுத்த புகாரை தொடர்ந்து, குஜிலியம்பாறை ஒன்றியத்திலுள்ள மற்ற 16 ஊராட்சிகளிலும் 100நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து மாவட்ட அதிகாரிகள் முழு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: