உரிய வழித்தடம் செல்லாத மினிபஸ்களின் அனுமதி ரத்து பழநியில் மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்

பழநி, ஜன. 14: உரிய வழித்தடங்களில் செல்லாத மினிபஸ்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென பழநியில் மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட வரதாபட்டிணம், வண்ணாந்துறை வழித்தடங்ளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அனைத்தும் விவசாய கிராமங்களான இப்பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பழநியில் இருந்து வரதாபட்டிணத்திற்கு செல்ல வேண்டிய மினிபஸ்கள் முறையாக செல்வதில்லை. ஆயக்குடியில் திரும்பி விடுகின்றன. இதன் காரணமாக பழநிக்கு செல்லும் வரதாபட்டிணம், வண்ணாந்துரை பகுதிகளில் வசிக்கும் கிராமமக்கள் ஆயக்குடி வரை மினிஆட்டோ அல்லது நடந்து வந்து பஸ் ஏற வேண்டி உள்ளது. இதனால் விவசாய பணிகளுக்கு செல்வோர், பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மினிபஸ்களை வரதாபட்டிணம் வரை இயக்க வேண்டும். முறையான வழித்தடத்தில் இயங்காத மினிபஸ்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காத வட்டார போக்குவரத்து அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பழநி குளத்துரோடு ரவுண்டானா முன்பு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஆயை ஜப்பார் தலைமை வகிக்க, தொகுதி பொறுப்பாளர் வினோத், நகர செயலாளர் பெஸ்ட் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: